சுடுமண் கலன்? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் வலியுறுத்தல்!
பட்டிணமருதூரில் சுடுமண் கலன் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் பட்டிணமருதூரில் சுடுமண் கலன் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, "தூத்துக்குடி மாவட்டம் பட்டிணமருதூரில் சர்வே எண் 184/1 கண்மாயில் வடபுறம் கரையில் உள்ள சிறிய அத்தி மரம் அருகில் காணப்படும் சுமார் 4அடி வெளி விட்டமும் 2 அங்குலம் விளிம்பு கனமும் கொண்டதாக தென்படுகிறது சுடுமண் கலனா? அல்லது வட்ட வடிவ உறை கிணறா? உடனடியாக ஆய்வு தேவை. இந்த கண்மாயானது 1950க்கு பின்புதான் தோண்டப்பட்டது என்பதும், இதன் மேல்புறம் பகுதியில் காணப்படும் மணல் கல் கட்டுமானங்கள் தொன்மையான சாலையினை போன்றுள்ளது என்றும் இதே நேர்கோட்டில் வடக்கே உள்ள சர்வே எண் 38 பகுதியிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெடி வைத்து தகர்க்கப்பட்ட சாலை போன்ற மணல் கல் சிதைவுகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வழிதான் பழைய சேது பாதை எனவும் 1958ம் ஆண்டு தருவைக்குளம் - சாயல்குடி சாலை அமைக்கும் பொழுது இந்த வழித்தடத்தினை புறக்கணித்து மேற்கே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தனது கள ஆய்வு புரிதல்களை பதிவு செய்து தொன்மங்கள் அதிகம் நாளுக்கு நாள் வெளியுலகிற்கு வந்து கொண்டிருக்கும் இந்த பகுதியினை அலட்சியம் செய்யாமல் தொல்லியல் துறையின் அதிகாரிகள் உடனே செயல்பட்டு இந்த தொன்மையான தமிழர்களின் நகர நாகரிக உண்மையினை வெளிகொணர்ந்திட வேண்டும். தான் ஏற்கனவே ஆவணப்படுத்தியுள்ள வேப்பலோடை, பட்டினமருதூர், தருவைக்குளம் போன்ற பகுதிகளில் நேர்கோட்டில் அமந்துள்ள மிக தொன்மையான மணல் கல்லால் வடிவமைக்கப்பட்ட குமிழ்தூம்புகளும் நம் பண்டைய தமிழர்களின் மிக சிறந்த நீர்மேலாண்மைக்கு சான்றுகள் என்றும் தனது மேம்பட்ட தரவுகளையும், கோரிக்கைகளையும் பதிவு செய்தார்.