இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாலிபால் போட்டி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாலிபால் போட்டி - கோப்பையை வென்றது நாமக்கல் முகாம் அணி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், தமிழன் விளையாட்டுக் கழகம் சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு இடையேயான மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் இரவு பகல் ஆட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த 45 வாலிபால் விளையாட்டு அணிகள் பங்கேற்றன. போட்டிகளை வத்தலக்குண்டு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் தொடங்கி வைத்தார். லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் இறுதிப் போட்டியில் வத்தலக்குண்டு முகாம் அணியும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி முகாம் அணியும் மோதின. இதில் 15:11 என்ற புள்ளிகள் கணக்கில் பரமத்தி முகாம் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வத்தலக்குண்டு ராயல் கால்பந்தாட்ட கழக தலைவர் சக்திவேல், ராயல் கூடை பந்தாட்ட கழக செயலாளர் முத்துப்பாண்டி, துணைச் செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர். லண்டன் வாழ் தமிழர் கோகுல் சார்பில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரம் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை தமிழன் விளையாட்டு குழு நிர்வாகிகள் சேகர், உதயன், கஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.