மோசடி வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-11-25 04:05 GMT
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவா் லலிதா. இவர் கடந்த மாதம் 21-ந் தேதி நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:  குமரி மாவட்டம் கருங்கலை சேர்ந்தவர் ஏசுராஜசேகரன் (49). இவர் தற்போது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பண்ணைபுரம் சின்னமாங்குளத்தில் வசித்து வருகிறார்.  இவர் கடந்த 2022-ம் ஆண்டு புதுக்கடை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினாா். அப்போது கொடுங்குளத்தில் எனது வீட்டின் முன் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார். அவருடன் கனகதுர்கா என்ற முனியம்மாள் என்ற பெண்ணும் அந்த வீட்டில் தங்கி இருந்தார். அந்த பெண்ணை அவர் தனது மனைவி என்று கூறி வந்தார். இந்தநிலையில் முனியம்மாள் பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருவதாகவும், அதன் மூலம் எனது மகனுக்கு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணி வாங்கித் தருவதாகவும் ஏசுராஜசேகரன் கூறினார். இதற்காக என்னிடம் இருந்து ரூ.4½ லட்சம் வாங்கினார். இதே போல மேலும் 50 பேருக்கு இளநிலை உதவியாளர் வேலையும், 10 பேருக்கு ஆசிரியர் வேலையும் இருப்பதாக என்னிடம் கூறினார். இதை நம்பி எனது உறவினர்களிடம் தெரிவித்தேன். இதையடுத்து எனது உறவினர்கள் உள்பட பலர் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பணம் கொடுத்தனர். அந்த வகையில் மொத்தம் 27 பேர் தங்களது வீடு மற்றும் நகை ஆகியவற்றை அடமானம் வைத்து மொத்தம் ரூ.1.47 கோடி கொடுத்துள்ளனர். ஆனால் ஏசுராஜசேகரன் கூறியது போல் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டார். எனவே ஏசுராஜசேகரன் மற்றும் முனியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நாங்கள் கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் மற்றும் அவருடைய மனைவி என்று கூறிய முனியம்மாள் ஆகிய 2 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முனியம்மாள் மீது தேனி மாவட்டத்தில் ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது தெரியவந்தது. அத்துடன் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி. மூர்த்தி உத்தரவிட்டார். இந்தநிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரனை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பணம் மோசடி புகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News