இந்து ஆதித்யன் சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
போராட்டச் செய்திகள்
'இந்து ஆதியன்' என ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி புதுக்கோட்டையை அடுத்த காமராஜ் நகர் மக்கள் கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காமராஜ் நகரில் சுமார் 40 குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்து ஆதியன் வகுப்பைச் சேர்ந்த இவர்கள், தங்களுக்கு அந்தப் பெயரிலேயே ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, கீரனூர் வட்டாட்சியரகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலர் சி. ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநிலச்செயலர் எஸ். சங்கர், மாவட்டச் செயலர் டி. சலோமி, பொருளாளர் கே.சண்முகம் உள்ளிட்டோரும் பேசினர். குளத்தூர் வட்டாட்சியர் கவியரசு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை தலைமையில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.