புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவிலில் அலைமோதிய கூட்டம்!

நைனாமலை மீது வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் சுவாமியை வழிபட்டு சென்றனர். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.நைனாமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2024-10-05 08:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நைனாமலை வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் 3-வது வார புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக உள்ளது. அதில் குறிப்பாக புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகள் விஷேசமானதாக உள்ளது. பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவர். பெருமாள் கோவில்களில், புரட்டாசி உற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள நைனாமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி உற்சவ விழா நான்கு சனிக்கிழமைகளிலும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 3-வது வார புரட்டாசி சனிக்கிழமையை (05.10.2024) முன்னிட்டு திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.இதில், நாமக்கல், சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, நைனாமலை மீது வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத அருள்மிகு வரதராஜ பெருமாள் சுவாமியை வழிபட்டு சென்றனர். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.முன்னதாக, நைனாமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்,நைனாமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 3-வது வார புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்ல சேலம், இராசிபுரம், நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நைனாமலை மலை உச்சியை ஏற முடியாத வயதான பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள பாதமண்டபத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி சென்றனர். புரட்டாசி விழாவை முன்னிட்டு சேந்தமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பக்தர்களுக்கு ஆன்மிக அமைப்புக்கள் மற்றும் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம், நீர்-மோர் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் நைனாமலைக்கு தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைந்து, பக்தர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News