எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் பட்டப் பகலில் தொடர் திருட்டுச் சம்பவம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் அடுத்தடுத்து பட்ட பகலில் தொடர் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த குரும்பப்பட்டி கிராமம் வெண்டனுர் பகுதியில் வசித்து வரும் முருகன் மகன் கார்த்திகேயன்(35) இவரது மனைவி பாக்கியம் (30) தனது மகன் கவுசி (3) யுடன்வசித்து வருகின்றனர். கார்த்திகேயன் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஊருக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் பாக்கியம் அக்டோபர் 17 மதியம் 12 மணியளவில் அங்கன்வாடியில் இருந்த தனது மகனை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு பின்புறம் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் போட்டுவிட்டு இரண்டு மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோவை திறந்து 18 பவுன் தங்க நகைகள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக பாக்கியம் தனது கணவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். கார்த்திகேயன் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்ததின் பேரில், கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.