தேசிய தொல்குடியினர் தினத்தில் அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், மேலூரில் தேசிய தொல்குடியினர் தினம் 2024-ஐ முன்னிட்டு நடைபெற்ற முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 3 பயனாளிகளுக்கு உடனடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாடு முழுவதும், நவம்பர் திங்கள் 15 ஆம் நாள் தேசிய தொல்குடி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடியினர் தினத்தை கொண்டாடும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, 15.11.2024 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வராயன் வட்டம் வெள்ளிமலையில் உள்ள பழங்குடியினர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பசுமை இயக்கத்துடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 328 பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் சுமார் 24,000 மாணவர்கள் அந்தந்த பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தார்கள்.தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் கடந்த 16.11.2024 முதல் தொடங்கப்பட்டு 24.11.2024 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆதார் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், PM – கிசான் அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள், மக்கள் நிதி வசதி திட்ட அட்டைகள் மற்றும் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் பிற சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் பழங்குடியின சமூக மக்களின் நலனுக்காக நடத்தப்பட்டு அதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்பாடுகள் அவர்களை சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் அட்மா குழுத்தலைவர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், பழங்குடியினர் திட்ட அலுவலர் தே.பீட்டர் ஞானராஜ், இராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.