பைக் விபத்தில் இன்ஜினியர் பலி: நண்பர் படுகாயம்!

கயத்தாறு அருகே பைக் விபத்தில் டிப்ளமோ இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-10-22 04:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி 2-வார்டு தங்கம்மாள்புரம் நடுத் தெருவில் வசித்து வருபவர் சண்முகம். விவசாயி. இவரது மகன் துரைராஜ் (29). டிப்ளமோ இன்ஜினியர். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது செல்போனை ரிப்பேர் செய்வதற்காக கடம்பூரில் இருந்து பாளையங்கோட்டைக்கு பஸ்சில் சென்றார். அங்குள்ள ஒரு கடையில் செல்போனை ரிப்பேர் செய்து விட்டு, தனது நண்பரும், செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றாக படித்த என்.ஜி.ஓ.பி. காலனியில் வசித்து வரும் சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் ஆனந்த்(29) வீட்டுக்கு துரைராஜ் சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் இருந்து இரவில் ஆனந்தின் மோட்டார் சைக்கிளில் இருவரும் கடம்பூரில் உள்ள துரைராஜ் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ஆனந்த் ஓட்டியுள்ளார். துரைராஜ் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார். மதுரை-நெல்லை நான்கு வழிச்சாலையில் இருந்து கயத்தாறு நகருக்குள் செல்லும் அரசன் குளம் சர்வீஸ் ரோட்டில் இரவு சுமார் 8 மணியளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில ்சென்றுள்ளனர். அப்போது, சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறியபோது, திடீரென்று மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் 2பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் சாலையில் கிடந்த ஆனந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் காசிலங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்த துரைராஜ் உடலை மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News