கபிலர்மலை அருகே கரும்பு ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
கபிலர்மலை அருகே நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் கரும்பு ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர்.அக்,25: நாமக்கல் மாவட்டம். பரமத்தி வேலூர் தாலுகா கபிலகுறிச்சி கிராமம் ரங்கம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் கரும்பாலை. இதற்கு முன்பு இந்த இடத்தில் தேங்காய் நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இருந்தது. தற்போது அந்த தொழிற்சாலையை (EID PARRY) என்ற நிறுவனம் விலைக்கு வாங்கி நாட்டு சக்கரை தயாரிக்கும் ஆலையாக புதுப்பித்து சுகர் மில் ஆலையாக மாற்றினார். தரம் குறைவான சக்கரையை எடுத்து வந்து கரும்பு சாருடன் சேர்த்து அதிகமாக ஆசிட் ஊற்றி சுத்தம் செய்து நாட்டுச் சர்க்கரையாக உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். கரும்பு சாறுடன் சக்கரை சேர்க்கும் பொழுது அதனை சுத்தம் செய்ய அதிகப்படியான ஆசிட் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து சுத்திகரிப்பு செய்கின்றனர். அவ்வாறு செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் அருகில் உள்ள விவசாய நிலம் மற்றும் ஏரிகளில் கலப்பதால் கிணறுகள்,ஆழ்துளை கிணறுகள்,ஏரியில் உள்ள தண்ணீர் ஆகியவற்றில் கலந்து தண்ணீர் மாசடைந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும்படியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் லாரிகளின் மூலம் ஆலையின் அருகில் காலியாக உள்ள விவசாய நிலங்களில் கொண்டு விடுவதால் ஆடு மாடுகளை மேய்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆலை நிர்வாகத்திடம் ரங்கம்பாளையம்,சுப்பையாம் பாளையம்,செஞ்சுடையம்பாளையம், சீத்தக்காடு ,கபிலக்குறிச்சி ஊர்மக்கள் சென்று கேட்டபோது அதனை சரி செய்து கொள்வதாக கூறியிருந்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆலை நிர்வாகம் தொடர்ந்து விவசாய நிலங்களிலே கழிவுநீரை கொண்டு ஊற்றி வருகின்றனர். இதில் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று கபிலர்மலையில் இருந்து கந்தம்பாளையம் செல்லும் சாலையில் ஆலையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் முத்துக்குமார் மற்றும் ஜேடர்பாளையம் காவல் ஆய்வாளர் இந்திராணி ஆகியோர் ஆலை மற்றும் கழிவு நீர் கலக்கும் இடங்களை பார்வையிட்டு ஆளை நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை விவசாய நிலங்கள் மற்றும் ஏரிகளில் கலக்காத படி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும், கழிவுநீர் ஆலையை விட்டு வெளியேற்றக் கூடாது என ஆலை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு உடன்படாத ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் ஆலையை மூடி சீல் வைக்க வேண்டும் எனவும் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.