நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அம்மன் வேடத்தில் வந்து மனு அளித்த பெண்!
மோகனூர் போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அடிக்கடி பிரச்சினை செய்வதால், எங்கள் குடும்பம் பாதிக்கப்படுகிறது.
பெண்களை தவறாக பேசியவர்களை தட்டி கேட்டதால், தன்னை தொடர்ந்து அநாகரிகமாக பேசுவதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, அம்மன் வேடத்தில் வந்த பெண் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி முத்துராஜா தெருவில் வசித்து வருபவர் புவனேஸ்வரி (43). அவர் அம்மன் வேடம் அணிந்து கையில் அட்டை வேலுடன், கோரிக்கை மனு ஒன்றை கொண்டுவந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது.... நாமக்கல் வளையப்பட்டியில் வசித்து வருகிறேன். தையல் தொழில் செய்துவருகிறேன். என் கணவர் ஞானசேகரன், கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு, யுகன், அஸ்வின் என்ற 2 மகன்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் வசிக்கும் சிலர், ரோட்டில் செல்லும் பெண்களை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களை நான் தட்டிக்கேட்டேன். அதை தொடர்ந்து, அவர்கள் என்னையும், என் குடும்பத்தையும் தகாத வார்த்தையால் திட்டுவதும், தொடர்ந்து பல்வேறு பிரச்சினை செய்தும் வருகின்றனர். எங்கள் குடும்பத்தினரை அவ்வப்போது தாக்கி வருகின்றனர்.இது குறித்து, மோகனூர் போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அடிக்கடி பிரச்சினை செய்வதால், எங்கள் குடும்பம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளோம். அதற்காக மாத தவணை செலுத்தி வருகிறோம். தொடர்ந்து, பிரச்சினை செய்வதால் தொழில் செய்ய முடியாமல், எங்கள் வருமானம் பாதிக்கப்படுகிறது. அதனால், தவணை செலுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் எங்களால் உயிர் வாழ முடியாது. எனவே, எங்கள் உயிர் பாதுகாப்பிற்காவும், வாழ்வாதாரத்திற்காகவும், எங்கள் மன நிம்மதிக்காகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.