நாமக்கல்: மிளகு பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பேளுக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மிளகு பதப்படுத்தும் மையத்தில் ஆய்வு.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மிளகு பதப்படுத்தும் மையத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வேளாண் நிதிநிலை அறிக்கை (2021-22 ஆம் ஆண்டு) மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதன் அடிப்படையில், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் விற்பனைக்குழு நிதியின் கீழ் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் சேந்தமங்கலம் வட்டாரம், பேளுக்குறிச்சி கிராமத்தில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலைமைச்சர் 22.10.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. கொல்லிமலை வட்டாரத்தில் 2623 ஹெக்டேர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு 2623 மெ.டன் உற்பத்தி செய்யப்பட்டு உற்பத்தி சந்தை உபரி 2595 மெ.டன் ஆக உள்ளது. இம்மையத்தில் உள்ள 6 மெ.டன் மிளகு உலர்திறன் கொண்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி மூலம் ஒரு சமயத்தில் 3000 முதல் 6000 கிலோ வரை மிளகினை 3 நாட்களுக்குள் உலர்த்தலாம். இவ்விதமாக மாதமொன்றுக்கு 30 முதல் 60 மெ.டன் மிளகினை உலர்த்த வசதி செய்யப்பட்டுள்ளது. உலர்த்தப்பட்ட மிளகினை 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட பரிவர்த்தனைக் கூடத்தில் சேமித்து வைக்கும் படி கிட்டங்கி அமைக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்வசதிக்கென மின் ஆக்கி (ஜெனரேட்டர்) வசதியுடன் 96 ச.மீ பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தை, இப்பகுதி மிளகு உற்பத்தி செய்யும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் உணவு பதப்படுத்துபவர்கள் ஆகியோர் வருடாந்திர குத்தகை அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும் வாடகையினை செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம். இதன்மூலம் இப்பகுதிகளில் மிளகு வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், சேமித்து ‘வைத்து ஏற்ற விலை கிட்டும் பட்சத்தில் விற்பனை செய்து உழவர்கள் பயனடையும் நோக்கத்தின் அடிப்படையில் இம்மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதி விவசாயிகளுக்கு முதன்மை செயலாக்க வசதியை வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாடுகளை மேம்படுத்துதல், மதிப்புக்கூட்டப்பட்ட மிளகு விற்பனை மூலம் கூடுதல் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுதல், வருமான உயர்வின் அடிப்படையில் பழங்குடியின விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நிலையயை மேம்படுத்துதல் ஆகியவை இம்மையத்தின் குறிக்கோள்கள் ஆகும். எனவே விவசாயிகள் இம்மையத்தினை பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.