நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா
மழையை பொருட்படுத்தாமல் சந்தனக்கூடு ஊர்வலம் சென்றது
நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள ஆண்டவர் தர்காவில், 468 வது ஆண்டு கந்தூரி விழா கடந்த இரண்டாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நாகூர் தர்காவில் நாள்தோறும் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது, இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நாகையிலிருந்து மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்றது. நாகை மற்றும் நாகூர் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்றது. சாலையின் இரு புறமும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் நின்று சந்தனக் கூட்டின் மீது மலர்களை தூவி வழிபாடு நடத்தினர். சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை 4 மணி அளவில் நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின்னர் ஹஜ்ரத் ஒருவர் சந்தன கூட்டில் இருந்து சந்தனக்கூடத்தை தூக்கிக்கொண்டு தர்காவிற்குள் சென்றார். பின்னர் ஆண்டவரின் சமாதியில் சிறப்பு துவா ஓதப்பட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், விழாவை முன்னிட்டு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.