அதங்கோட்டாசான் என்றழைக்கப்பட்ட தமிழ்பெரும்புலவர் கி.மு-7-ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் தற்போதைய மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு எனும் கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து, நமது மண்ணில் தமிழ் வளர்க்க அரும்பணியாற்றியவர். அப்போதைய பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கபாடபுரத்தில் உள்ள தமிழ் சங்கத்தில் இணைந்து தமிழ் பணி ஆற்றினார்கள். குறிப்பாக, தமிழ் இலக்கியங்களில் ஒன்றான தொல்காப்பியத்தை வளர்த்து, அன்றைய அரசவையில் தமிழ் கவிஞராகவும் விளங்கியவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்கள். மேலும், அகத்திய முனிவரின் முக்கியமான 12-சீடர்களில் தலைசிறந்த ஒருவராகவும் திகழ்ந்தார். மேலும், இவர் பிறந்த ஊரான அதங்கோட்டில் தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும், டிசம்பர் 12-ம் தேதி தமிழக அரசின் சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றையதினம் (12.12.2024) அதங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு பா.ஜாண் ஜெகத் பிரைட், அதங்கோட்டாசான் வாரிசு புலவர் கோவிந்தநாதன், ஊராட்சி தலைவர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.