அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி மனு
அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி மனு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சியில், புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஊராட்சியில், தமிழக அரசு சார்பில், பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தனியார் ஆக்கிரமிப்புகளில் உள்ளதால், அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு வருவதாக கூறுகின்றனர். தற்போது, தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமங்களுக்கான பரிசு தொகை திட்டத்தின் கீழ், வேடந்தாங்கல் ஊராட்சிக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணியருக்கு தண்ணீர் வசதியுடன் உணவருந்தும் கூடம் கட்டுவதற்கு, ஊராட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில் தேர்வு செய்யப்பட்டுள்ள, சர்வே எண் 313/1ல் உள்ள அரசுக்கு சொந்தமான நிலம், தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், அரசு கட்டடம் கட்டக்கூடாது என, தனி நபர்கள் தடை செய்கின்றனர். இதையடுத்து, உணவு அருந்தும் கூடம் கட்ட, ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு, மதுராந்தகம் வட்டாட்சியருக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பாக, நேற்று முன்தினம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன் கூறியதாவது: வேடந்தாங்கல் ஊராட்சியில், சுற்றுலா பயணியர் உணவருந்தும் கூடம் அமைப்பதற்கான இடத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் தேர்வு செய்துள்ளனர். அந்த இடம், தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், உரிய ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.