முதலீடு மோசடி: புகார் செய்ய பொருளாதாரக் குற்றப் பிரிவு அழைப்பு

கிரைம்

Update: 2024-12-20 11:22 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவர்கள் புகார் செய்ய பொருளாதாரக் குற்றப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி தெரிவித்திருப்பது: பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹம்மது டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் வழுத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய மர்ஜிக் கேப்ஸ் அன்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதில் வரும் லாபத் தொகையில் பங்கு தருவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்றனர். ஆனால், லாபத் தொகையில் பங்கு தராமலும், பெறப்பட்ட தொகையைத் திருப்பித் தராமலும் மோசடி செய்து ஏமாற்றியதாக இரு நிறுவனங்கள் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தஞ்சாவூர் பொருளாதாரா குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் 'ஹம்மது டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் மர்ஜிக் கேப்ஸ் அன்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் யாரேனும் முதலீடு செய்து, ஏமாற்றமடைந்திருந்தால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி  சாலை ராஜப்பா நகர் முதல் தெருவிலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்  ஆய்வாளர் அலுவலகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் கொடுக்கலாம்" என்றார்.

Similar News