திருமணம் செய்து வைக்காத கோபத்தில் தந்தையை வெட்டிய தீயணைப்பு வீரர் தற்கொலை
கிரைம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மேலப்புனவாசல் பகுதியை சேர்ந்த சேகர் (55),. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு விக்னேஷ் (29), ராஜேஷ்குமார் (25) , மூர்த்தி (23) என்ற மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் திருவையாறு தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சமீபகாலமாக விக்னேஷ் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி கூறி வந்துள்ளார். ஆனால், சேகர் எவ்வித பதிலும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். தனது தந்தை திருமணம் செய்து வைக்காததால், ஆத்திரமடைந்த விக்னேஷ் வியாழக்கிழமை இரவு தனது தந்தை சேகரை, அரிவாளால் பின் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இதில், சேகர் படுகாயமடைந்தார். உடனே சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சேகர் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தையை வெட்டிய சிறிது நேரத்தில், மனமுடைந்த விக்னேஷ் வீட்டின் ஒரு அறைக்கு சென்று அங்கிருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அறையின் கதவை உடைத்து, விக்னேஷை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை விக்னேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மருவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.