பேராவூரணி, தஞ்சாவூரில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

போராட்டம்

Update: 2024-12-20 11:27 GMT
சட்ட மாமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசிய  ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலகக் கோ‌ரியு‌ம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.  மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ''இன்று அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது பேஷனாகி விட்டது. அம்பேத்கர் என முழங்குபவர்கள் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் 7 பிறவிகளுக்கு சொர்க்கத்தை அடையலாம்" என அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.  பேராவூரணி ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அமித்ஷா பதவி விலகக் கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.சவுந்தரராஜன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், நகரச்செயலாளர்கள் பேராவூரணி என்.எஸ்.சேகர், பெருமகளூர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் ,  சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான் மற்றும் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலக வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் மன்னர் சரபோஜி கல்லூரி கிளை தலைமையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்  பிரேம்குமார், கிளை நிர்வாகி சரோஜினி, மாவட்டத் தலைவர் அர்ஜுன் ஆகியோர் கண்டனவுரை ஆற்றினார். இதில் கிளை நிர்வாகிகள் வசந்த், வீரராஜ், திலீப், கபிலன் ஆகியோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Similar News