புதுப்பள்ளி தெருவில் ஆபத்தான நிலையில் உள்ள
மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க கோரிக்கை
நாகை மாவட்டம் திருமுருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சி புதுப்பள்ளி தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுப்பள்ளி தெருவில் உள்ள இரும்பு மின்கம்பம் ஒன்று சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது, இதனால் கனரக வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லும் போது மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதுகுறித்து திருமருகல் துணை மின் நிலையத்தில் பலமுறை கோரிக்கை மனுகள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.