அரபுநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி விவகாரம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்! -மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை நேரில் சந்தித்து கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கோரிக்கை

ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை துறைமுகத்திலிருந்து இந்த வார இறுதிக்குள் இறக்குமதி செய்திட நடவடிக்கை

Update: 2024-12-20 13:29 GMT
அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி வேண்டுகோள் விடுத்தார்.நாமக்கல்லில் இருந்து கத்தார், ஓமன், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு பல ஆண்டுகளாக கோழி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது திடீரென்று கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் முட்டை இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான முட்டைகள், தற்போது அந்நாட்டின் சோகர் துறைமுகத்தில் இறக்கப்படாமல் கப்பலில் உள்ளது.நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை உடனே இறக்குமதி செய்திடவும் அதேபோன்று கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிடவும், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள், மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் கே.ஆர்.என். இராஜேஸ்குமாரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.இதையொட்டி
கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்.பி., டில்லியில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
அப்போது, அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறி, முட்டை ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும், ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை துறைமுகத்திலிருந்து இந்த வார இறுதிக்குள் இறக்குமதி செய்திட நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றும் கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க, இம்மாதம் அவர் கத்தார் நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டு அமைச்சருடன் பேசுவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாக கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Similar News