உண்டியலில் ஐபோன் விழுந்த விவகாரம், அமைச்சர் பதில்

உண்டியலில் ஐபோன் விழுந்த விவகாரம், அமைச்சர் பதில்

Update: 2024-12-21 15:36 GMT
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இதனால் பதறிய அவர் உண்டியலை திறந்து தனது செல்போனை திருப்பி தருமாறு கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து தினேஷ் இது குறித்து சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அப்போது திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறிஅனுப்பி விட்டனர். இந்நிலையில் நேற்று திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அதில் பக்தர் தவறுதலாக செலுத்திய ஐபோனும் இருந்தது. இதுபற்றி தினேசுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உண்டியல் எண்ணும் இடத்திற்கு வந்தார். அவர் ஐபோன் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்து செல்போனை பெற முயன்ற போது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.இந்நிலையில் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உண்டியலில் ஐபோன் விழுந்த சம்பவம் பற்றி அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாது:- சென்னையை சேர்ந்த தினேஷ் என்பர் கோவில் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இதற்கான சாத்தியக்கூறு இருந்தால் ஐபோன் திரும்ப வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News