விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-22 09:58 GMT
தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிச. 28-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனியார் அமைப்பின் இசை நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பது கவலை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் படுகொலை நடைபெறும்போது எளிய மக்களுக்கான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசிய கருத்துகள் சட்டத்துக்கு புறம்பாக இருந்ததால் அவரை கைது செய்துள்ளனர். சட்டம் தன் கடமையை செய்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை இந்த நேரத்தில் பேச முடியாது. தமிழகத்தில் கூட்டணி இன்றி தனியாக எந்த கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முடியாது. பாஜக-அதிமுக கூட்டணிக்கு வர வேண்டுமென டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்று சேர்ந்தால் அது பலம்தான். ஆனால், இதுகுறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல், இரு கட்சிகளும் நேரத்தை வீணடித்து வருகின்றன. 234 தொகுதிகளிலும் தேமுதிக அமைக்கும் கூட்டணி வெற்றிபெறும். உள்ளாட்சித் தேர்தலுக்கும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தேமுதிக தயாராக உள்ளது. விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சியினரையும் அழைக்க உள்ளோம் என அவர் கூறினார்.

Similar News