பேராவூரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பையை கொண்டு செல்லும் அவலம்....
பொது பிரச்சனைகள்
பேராவூரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பைகளை கொண்டு செல்லும் புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், தூய்மை பணியாளர்கள் இல்லை. கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அமர வைத்து அழைத்துச் செல்லப்படும் ஸ்ட்ரெச்சர் வண்டியில், குப்பை கூடையை பணியாளர் ஒருவர் வைத்து தள்ளிச் செல்லும் காட்சி புகைப்படமாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர் பொன்-காடு ரஹீம் கூறுகையில், " நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சமூக நல அமைப்புகள் ஸ்ட்ரெச்சர் வண்டியை வழங்குகின்றன. அதன் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் குப்பைக்கூடையை வைத்து தள்ளிச் செல்லும் வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில், உணவுக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள் கொண்டு செல்லப்படுகின்றன. இதிலேயே காயம்பட்டு வரும் நோயாளிகளையும் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நோயாளிகளையும் குப்பைக் கூடைக்கு சமமாக கருதுகின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது. மருத்துவமனைக்கு வரும் நானே பலமுறை இந்த காட்சியைக் கண்டு, இதுகுறித்து கேள்வி எழுப்பியும் பலன் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரும் கோரிக்கையாக உள்ளது.