சேலம் சீலநாய்க்கன்பட்டியில் கோழி விற்பனை செய்த தகராறு
பீர்பாட்டிலால் தொழிலாளியை குத்தியவர் கைது
சேலம் தாதகாப்பட்டி அருணாசலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 34). கூலித்தொழிலாளியான இவர், தனது நண்பரான தாதகாப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன் (39) என்பவரிடம் இருந்து ரூ.700-க்கு நாட்டு கோழியை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தகவலை தனது மற்றொரு நண்பரான வெங்கடேசிடம் தெரிவித்து மணிகண்டனிடம் இருந்து தான் கோழியை வாங்கியதாக மனோஜ்குமார் தெரிவித்தார். அதற்கு அந்த கோழி சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்து பிடித்து வரப்பட்டது என்றும், அதை ஏன் வாங்கினாய்? என்று அவர் கேட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த மணிகண்டனிடம் மனோஜ்குமார் கேட்டுள்ளார். அப்போது, தான் கோழியை திரும்ப கொடுத்து விடுகிறேன். அதே நேரத்தில் தான் கொடுத்த பணம் ரூ.700-ஐ திரும்ப தருமாறு மனோஜ்குமார் கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பீர் பாட்டிலால் மனோஜ்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில், அவரது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் பாட்டிலால் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.