எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா? - அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்

மத அரசியல் செய்யாத மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.

Update: 2024-12-24 16:07 GMT
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ஏழை, எளிய மக்களுக்குக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட தலைவர் எம்ஜிஆர். எத்தனையோ தலைவர்கள் சமுதாயத்தில் பிறக்கின்றனர், மறைகின்றனர். ஆனால், 37 ஆண்டுகள் மட்டுமல்ல, இந்த உலகம் உள்ளவரை, எம்ஜிஆரின் புகழ் அழியாது. என்றென்றும் நிலைத்திருக்கும். அந்தளவுக்கு கலைத் துறை, அரசியல், ஆட்சி நிர்வாகத்தில் முத்திரை பதித்தவர். அவரது கனவுகளை முழுமையான அளவுக்கு நனவாக்கியவர் ஜெயலலிதா. அவ்விருபெரும் தலைவர்களின் ஆசியுடன், 1000 ஆண்டுகள் ஆனாலும் சரி, யாராலும் தொட்டுப்பார்க்க முடியாத வகையில் அதிமுக தழைத்து ஓங்கி வளரும். தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தல், 43 மாத ஹிட்லர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். மோடிக்கும், எம்ஜிஆருக்கும் பல பொருத்தங்கள் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அப்படி என்ன பொருத்தம் இருக்கிறது? எம்ஜிஆரை யாருடனும் ஒப்பிடமுடியாது. வரலாற்றில் முத்திரை பதித்தவர். சாதி, சமயம் பார்க்காதவர். வேறுபாடு பார்க்காதவர். மத ரீதியாக அரசியல் செய்யாதவர். இதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லோருமே எம்ஜிஆரை போற்றினர். பிரதமர் மோடியை அவ்வாறு போற்றுகிறார்களா? சமூக நீதி என்ற அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை எம்ஜிஆர் தான் கொண்டுவந்தார். அதைதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிரித்து கொடுத்தார். தனியாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய மக்களுக்காக அவர் எதுவும் செய்யவில்லை. இன்றைக்கு பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு அதிமுக தான் காரணம். ஆனால் மதத்தால் பிரிவினை வாதம் செய்துகொண்டிருப்பது தான் பாஜகவின் வேலையாக இருக்கிறது. இதில் சமநிலை எங்கே இருக்கிறது? எனவே எந்த நிலையிலும் எம்ஜிஆரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட முடியாது. மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாமாகத்தான் இதை பார்க்க முடியும் என்று அவர் கூறினார்.

Similar News