எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்த எம்எல்ஏ.
மதுரை உசிலம்பட்டியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு நேற்று (டிச.24)மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து, பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், உசிலம்பட்டி மக்களின் ஜீவாதார பிரச்சனையான 58 கால்வாயில் தமிழக அரசு உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும், மாவட்ட நிர்வாகம் பொதுப் பணி துறையும் இணைந்து வெகு விரைவில் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் அப்படி தண்ணீர் திறக்கவில்லை என்றால், உசிலம்பட்டி மக்களை திரட்டி ஓ.பி.எஸ். தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும்,தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடந்து கொண்டே இருப்போம், கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டம் நடத்தியே கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளோம் என்றும் இந்த ஆண்டும் அதே நிலைமை நீடிக்கிறது, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீரை 58 கால்வாயில் திறந்து விட வேண்டும் எனவும், இந்த எம்ஜிஆரின் 37 ஆவது நினைவு நாளில் தீய சக்தி எடப்பாடி பழனிச்சாமி கையில் இருந்து இரட்டை இலையை மீட்டு தீய சக்தி எடப்பாடியை அனாதை ஆக்கிவிட்டு ஓபிஎஸ் தலைமையில் 2026 முதலமைச்சர் ஆக்குவோம் என்று இந்த நினைவு நாள் சூளுரை ஏற்போம் எனப் பேசினார்.