எடைக்கு போடப்பட்ட 10-ம் வகுப்பு விடைத்தாள்கள்
சிவகங்கை பழைய பொருளுடன் எடைக்கு போடப்பட்ட 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் அரவைக்கு முன் ஆசிரியர்கள் மீட்டனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிகின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 6 முதல் 8 வகுப்புகளுக்கு டிசம்பர் 9-ல் தேர்வு துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. 10 ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. 10 ஆம் வகுப்பு மாணவர்க ளின் தமிழ், கணிதம், அறிவியல் விடைத்தாள்கள் கடந்த சனிக்கிழமை பழைய பொருட்களுடன் சேர்த்து தவறுதலாக எடைக்கு போடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் தேடியபோது எடைக்கு போனது தெரியவந்தது. இதனையடுத்து, மதுரையில் அரவைக்கு செல்லும் முன் விடைத்தாட்களை ஆசிரியர்கள் மீட்டு வந்தனர். இது தொடர்பாக தலைமையாசிரியர் ஆரோக்கியராஜா பேசுகையில் பழைய பேப்பருடன் தற்போது நடந்த தேர்வு விடைத்தாள்களையும் எடைக்கு போட்டு விட்டனர். இது தெரிந்ததும் மீட்டு வந்து விட்டோம். 9 ஆம் வகுப்பு கணிதம் 28 பேப்பர், 10 ஆம் வகுப்பு கணிதம் 28 என 56 விடைத்தாள்களை திரும்ப பெற்று விட்டோம் என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.