சென்னை விமான நிலையத்தில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.3.6 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த சென்னை நபர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படவுள்ளதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஆர்ஐ அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவில் பாங்காக்கில் இருந்து விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த 30 வயதுடைய ஆண் பயணி வந்தார். சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு வந்த அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்த பின்னர், அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து சோதனை செய்தனர். அதில், ரூ.3.6 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கு குருவியாக வேலை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி சென்னை சேர்ந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.2.6 கோடி மதிப்புள்ள 2.8 ஒரு கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா, கடந்த 16-ம் தேதி ஆண் பயணிடம் இருந்து ரூ.7.6 கோடி மதிப்புள்ள 7.6 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, மூன்றாவது சம்பவமாக ஆண் பயணியிடம் இருந்து ரூ.3.6 கோடி மதிப்புடைய 3.6 கிலோ உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் ரூ.14 கோடி மதிப்புடைய 14 கிலோ உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.