மீனவர்கள் பிரச்சனை - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூல் ஹக்கீம் பேட்டி

இருநாட்டு மீனவர்கள் பிரச்சனையில் ராஜாங்க ரீதியாக தீர்வு காண வேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூல் ஹக்கீம் வலியுறுத்தல்

Update: 2024-12-29 12:45 GMT

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூல் ஹக்கீம் பேட்டி 

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கண்டி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூல் ஹக்கீம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்:

அப்போது பேசிய அவர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன்சிங் இருநாட்டு பிரச்சனையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதுடன், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அவர் மனைவிக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மீனவர் பிரச்சனை என்பது இரு சமூகத்துக்கு இடையேயான முக்கிய பிரச்சனை என்பதால் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி மீனவர் பிரச்சனைக்கு ராஜாங்க ரீதியாக சுமூக தீர்வு காண இருநாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும்.

சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி அனரகுமார திசநாயக்கா இந்திய பிரதமரை சந்தித்து பேச்சுகையில் மீனவர் பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அது விரைவில் நடக்கும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. ஆனால் இலங்கையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீன்வளத்துறை அமைச்சர் மீனவர் பிரச்சினையில் நிதானம் இல்லாமல் சூடாக பேசுவது மீனவர் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்திலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போதும் இந்திய அரசும் சீன அரசும் இலங்கைக்கு கடனுதவி அளித்ததுடன், பெரும் தொகையை நிதியாக அளித்ததால் இன்று இலங்கை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. எனவே இரு நாடுகளுடன் இலங்கை தொடர்ந்து நட்புடன் இருந்து வருகிறது.

இலங்கையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாகாண தேர்தல்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூட்டணி நிலைப்பாட்டை கட்சி முக்கிய தலைவருடன் பேசி விரைவில் அறிவிக்கும். தற்போது நடந்து முடிந்த தேர்தல் சுனாமியை போல் நடந்து முடிந்துள்ளதால் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை இது வருத்தம் அளித்தாலும் மனோ கணேசன் போன்ற மூத்த தலைவர்கள் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். புதிய ஜனாதிபதி அநுரகுமார திசைநாயகா பொருளாதார வீழ்ச்சியில் உள்ள இலங்கையை மீட்டு பொருளாதார வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என நம்புகிறோம்.

உள்நாட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வெளிநாடுகளில் நாங்கள் ஆளும் ஜனாதிபதியை பற்றி குறைத்து பேசுவது சரியாக இருக்காது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.  

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News