உளுந்தூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீஸ்காரர் ரமேஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில் பஸ் ஸ்டேன்ட் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 50, குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றதை கண்டறிந்து அவரது ஸ்கூட்டியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.பின்னர் வந்த வெங்கடேசன், ஸ்கூட்டியை தருமாறு போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஜெயச்சந்திரனிடம், 38, கேட்டார். ஜெயச்சந்திரன் ஸ்கூட்டியை தர முடியாது என கூறியதால் வெங்கடேசன் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், போலீஸ்காரர் ஜெயச்சந்திரனின் வலது கையை கடித்தார். படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.