காதல்கோட்டை இயக்குனர் அகத்தியனின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகை தேவயானி
திரை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு வந்த நடிகை தேவயானி, திரைப்பட இயக்குனர் அகத்தியனின் சொந்த வீட்டிற்கு சர்ப்ரைஸாக விசிட் அடித்த நிகழ்ச்சி பேசு பொருளாக மாறியுள்ளது. பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே ஆரா என்ற உணவகம் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை தேவயானி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி உணவகத்தை திறந்து வைத்தார். பின்னர் காதல் கோட்டை படத்தில் தன்னை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி தான் என்பதை அறிந்து அதுகுறித்து அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தார். அப்போது பேராவூரணி பொன் காடு பகுதியில் அகத்தியனின் சொந்த வீடு இருப்பதும், தற்போது அங்கு அவரது சகோதரி வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சர்ப்ரைஸாக விசிட் அடித்த தேவயானி இயக்குனர அகத்தியனின் சகோதரியிடம் அளவளாவியதோடு, இயக்குனர் அகத்தியனின் சிறுபிராயம் குறித்து எல்லாம் கேட்டறிந்தார். பின்னர் அகத்தியனுக்கு போன் செய்த தேவயானி தான் பேராவூரணி வந்து இருப்பதையும், அவரது வீட்டில் இருப்பதையும் தெரிவித்ததால் இயக்குநர் அகத்தியன் மகிழ்ந்து போனார். இதுகுறித்து பேராவூரணி செய்தியாளர் ஒருவரிடம் செல்போனில் பேசிய அகத்தியன், "தேவயானி எனது மகள் போன்றவர். நன்றி மறவாத திரைத்துறையினரில் அவரும் ஒருவர்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த சம்பவம் பேராவூரணி பகுதியில் பேசுபொருளாகி உள்ளது. அகத்தியன் தற்போது சென்னையில் வசித்து வருவதும், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.