நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வேளாண்மை

Update: 2025-01-04 05:54 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் நடப்பு சம்பா தாளடி பருவத்தில் சுமார் 5300 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  பேராவூரணி வட்டாரத்திற்கு உட்பட்ட குறிச்சி, மணவயல் ஆகிய கிராமங்களில் ஒருசில வயல்களில் மட்டும் புகையான் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு உட்பட்டு காணப்படுகிறது.  இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. "விவசாயிகள் பயிரை நெருக்கமாக நடுவதாலும், தழைச்சத்துக்காக யூரியா அதிகம் பயன்படுத்துவதாலும், அடியுரமாக பொட்டாஷ் இடுவதாலும், புகையான் மற்றும் பச்சை தத்துப்பூச்சி அதிகம் பெருகி சேதம் ஏற்படுத்துகின்றன.  இப்பூச்சிகள் இளம் பழுப்பு நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். நெல் பயிரின்  அடிபாகத்தில் புகையான் குஞ்சுகளும் பூச்சிகளும் இருந்து கொண்டு சாறை உறிஞ்சுவதால் பயிர்கள் வலுவிழந்து சாய்ந்துவிடும். பயிர்கள் முதலில் மஞ்சள் நிறமாகி பின் பழுப்பு நிறமாகி புகைந்தது போல் தோற்றமளிக்கும். தாக்குதல் அதிகமானால் நெல் மணிகளில் பால்பிடிக்காது கதிர்கள் பதராகி விடும். பயிர்கள் திட்டுத்திட்டாக காய்ந்து காணப்படும். தாக்கப்பட்ட பயிரின் அடிப்பகுதி பஞ்சுபோல் மாறி இறுதியில் அழுகிவிடும்.  புகையான் தாக்கப்பட்ட பகுதிகளில் குளோரிபைரிபாஸ், சைபர்மெத்ரின் போன்ற மருந்துகளை தெளித்தல் கூடாது. இவைகளை தெளித்தால் புகையான் மீண்டும் அதிக அளவில் உற்பத்தியாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். புகையான் தாக்கிய வயல்களில் நீரை வடித்து விட்டு சூரிய ஒளி நன்கு படும்படி பயிர்களை விலக்கி விடவேண்டும்.  பயிரின் அடிபாகம் நன்கு நனையும்படி இமிடாகுளோபிரிட் ஏக்கருக்கு 60மில்லி அல்லது தயோமெத்தாக்ஸாம் ஏக்கருக்கு 50கிராம் ஏதேனும் ஒன்றுடன் 100மில்லி ஒட்டு திரவம் சேர்த்து தெளித்து புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News