அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்
கொத்தமங்கலம் ஊராட்சி தாமரைக் குளம் தூர்வாரி சீரமைப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில், 6 ஏக்கர் பரப்பளவு உள்ள தாமரைக் குளம் உள்ளது. இந்தக் குளம் மிராசுதாரர் சங்கம் மூலமாக பராமரிப்பு செய்து, அதில் வரும் வருமான மூலம் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில், குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்து நீர் மாசுபடுவதை தடுத்து, குளத்தை தூர்வாரி, தடுப்பு சுவர்கள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை ஆய்வு செய்த நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குளத்தை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வார உத்தரவிட்டார். அதன்பேரில், 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பு சுவர் அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில், குளத்தைச் சுற்றிலும், மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், ஊராட்சி மன்றம் சார்பில், மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டது. தாமரை குளத்தை தூர்வாரி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த, தமிழக முதல்வர், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.