ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெடிகுண்டுகள் நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் கடந்தாண்டு ஜூலையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், இந்த வழக்கில் மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான 2 பேர் தலைமறைவாகவுள்ளனர். 26 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதற்கான பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்துடன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இன்னும் பலர் குண்டர் தடுப்புச்சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யவுள்ளதால் அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கும் வகையில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிர்கள் ஹமீது இஸ்மாயில், முத்தமிழ் செல்வக்குமார் ஆகியோர் அரசு தரப்பில் ஒவ்வொரு முறையும் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் அவகாசம் கோரப்படுகிறது. எனவே இந்த வழக்கில் இறுதி விசாரணைக்கான தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும், என ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்து தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா?. வெடிகுண்டுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக தனியாக விசாரணை நடந்து வருகிறது. என்றார். அதையடுத்து நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜன.27-க்கு தள்ளி வைத்துள்ளனர்.