கட்டுப்பாட்டு அறை திறப்பு
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கிழக்கு தொகுதி இடை தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை மேல் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாடு அறை இன்று திறக்கப்பட்டது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர் மணிஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.கட்டுப்பாட்டு அறையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் கண்காணிப்பு பணிகள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் பதிவு செய்து அவற்றிற்கு நடவடிக்கை எடுப்பது, பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பரிசுகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் நடைபெறும். மேலும் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு இங்கிருந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பறக்கும்படைக்கு உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.