ரேஷன் கடைகள் வெள்ளிக்கிழமையும் செயல்படும் - பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜன.10) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும், என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (ஜன.10) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.