தொகுதி மறு சீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 5-வது தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி

Update: 2025-01-09 04:18 GMT
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சிறப்பு வாய்ந்த தொகுதி. தந்தை பெரியார் பிறந்த ஈரோடு பகுதி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதி கடந்த 2011 தேர்தலில் அறிமுகமானது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ஈரோடு தொகுதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதி, வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம், பகுதிகளை கொண்டதாக ஈரோடு கிழக்கு தொகுதி அமைந்தது.2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. ஆனார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. நேரடியாக களம் கண்ட இந்த தொகுதியில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். 2021-ல் தேர்தல் களம் மாறியது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்த நிலையில் தி.மு.க. கூட்டணி முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலும், அ.தி.மு.க. கூட்டணி கட்சி பொதுச்செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் களம் கண்டன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் களத்தில் இருந்தன. இதில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.யுவராஜா 58 ஆயிரத்து 396 ஓட்டுகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். தந்தை பெரியாரின் பேரன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிக் மகன் என்ற பெருமையுடன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆன திருமகன் ஈவெரா தனது பணியாலும் பழகும் பண்பாலும் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு மிகவும் பிடித்த மக்கள் பிரதிநிதியானார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே நேரம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. ஒரு பெரும் பரபரப்புக்கு பின்னர், தி.மு.க. கூட்டணியில் மீண்டும் ஈரோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் தி.மு.க.வினர் தங்கள் தொகுதியாக கருதி களத்தில் தீவிர பணியாற்றினர். அவருக்கு போட்டியாக அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்காமல் நேரடியாக களத்தில் இறங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியில் இறங்கினார். அதுவரை இடைத்தேர்தல் என்றால் திருமங்கலம் பார்முலா என்ற நிலை மாறி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பார்முலா என உருவானது. வாக்காளர்கள் மாட்டு கொட்டகையில் அடைத்திருப்பது போன்று அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. வாக்காளர்கள் பரிசு மலையில் நனைந்தனர். பரபரப்பான இந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வின் கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 ஓட்டுகளும், தே.மு.தி.க.வின் ஆனந் 1,432 ஓட்டுகளும் பெற்றனர்.மகன் விட்டுச்சென்ற பணியை நான் தொடர்வேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் 75 -வது வயதில் மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி தொகுதி சீரமைப்புக்கு பிறகு 5-வது தேர்தலை சந்திக்க உள்ளது..

Similar News