சூலூர்: கல்லூரியில் கலகலப்பான பொங்கல் கொண்டாட்டம்!
கோவை,சூலூர் கலைஞர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா பாரம்பரிய கலைகளால் நிறைந்திருந்தது
கோவை,சூலூர் கலைஞர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா பாரம்பரிய கலைகளால் நிறைந்திருந்தது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளில் கலந்து கொண்டு, கரகாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளை ஆர்வத்துடன் நிகழ்த்தினர். குறிப்பாக, மாணவர்கள் கோவையின் பாரம்பரிய குடும்ப ஆட்டத்திற்கு வைபாகி நடனமாடிய காட்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.இந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திராவிடர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் தான் சமத்துவ பொங்கல் என்றும், இது நாடு முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.கல்லூரி மாணவர்கள், பொங்கல் விழா கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் கல்லூரிகளிலும் கொண்டாடப்படுவது தமிழர் பண்பாட்டை நன்கு புரிந்துகொள்ள உதவுவதாக தெரிவித்தனர்.பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழாவில், உறியடித்தல், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன் உட்பட கல்லூரி நிர்வாகத்தினர் இந்த விழாவை வெகு சிறப்பாக நடத்திய மாணவர்களை பாராட்டினர். இந்த பொங்கல் விழா, மாணவர்களுக்கு பாரம்பரியத்தின் மீதான அன்பை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தது.