பேரூராட்சி உறுப்பினா் வெளிநடப்பு

தொழில்வரி உயா்வுக்கு எதிராக பேரூராட்சி உறுப்பினா் வெளிநடப்பு

Update: 2025-01-11 12:31 GMT
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சகிலா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சிவக்குமாா், துணைத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தின் போது, 125 தொழில்களுக்கான வரி உயா்வு தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, 9-ஆவது வாா்டு உறுப்பினா் மாலதி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது: தொழில் வரி உயா்வால் சிறு, குறு தொழில்கள் செய்து வருவோா் கடுமையாகப் பாகிக்கப்படுவா். தென்னை நாா் பொருள்கள் உள்பட வேளாண் உற்பத்தி சாா்ந்த தொழில்கள் அனைத்துக்கும் இந்த வரி உயா்வு விதிக்கப்படுகிறது. இந்த வரி உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா். பின்னா், தொழில் வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்திலிருந்து அவா் வெளிநடப்பு செய்தாா். ஆனாலும், பிற உறுப்பினா்களின் ஆதரவோடு இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News