மஞ்சள் அறுவடை
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை தொடங்குவதால் இருப்பு வைத்து விற்க யோசனை
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை தொடங்கியதால் இருப்பு வைக்கவும், நேரடியாக விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை தொடங்க உள்ளதால் விளை பொருட்களை தனியார் கிடங்குகளில் இருப்பு வைக்கும் போது, ஈரோடு விற்பனை குழு உரிமம் பெற்றுள்ளது உறுதி செய்ய வேண்டும். பொருளின் பெயர், அளவு, எடை, விவசாயி பெயர், முகவரி அடங்கிய சேமிப்பு கிடங்கின் ரசீதுகளை, கிடங்கு உரிமையாளரிடம் இருந்து பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவ்வபோது கிடங்குக்கு வந்து, விளை பொருட்கள் பாதுகாப்பாக முறையாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். கிடங்கில் தீ, திருட்டு போன்றவற்றுக்கு காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில், பண்ணை வழி வர்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விளை பொருட்களை, விளை நிலத்திலேயே இடைத்தரகர் இன்றி நேரடியாக வணிகர்களிடம் விற்கலாம். இத்திட்டத்தில் நடைபாண்டில் 7.91 கோடி ரூபாய் மதிப்பில், 2,028 டன் தக்காளி, கோஸ், தேங்காய், கொப்பரை தேங்காய், வாழைத்தார், மஞ்சள், எள், நிலக்கடலை போன்றவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு விற்பனை குழுவின் கீழ் பெருந்துறை, அவல்பூந்துறை, கொடுமுடி, எழுமாத்தூர், சிவகிரி, அந்தியூர் , பூதப்பாடி, மயிலம்பாடி, சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 43,500 டன் கொள்ளளவு சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இங்கு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு வாடகை குறைவு.இருப்பு வைத்த பொருட்களுக்கு மின்னணு சேமிப்பு கிடங்கு ரசித்து பெற்று வங்கியில் குறைந்த வட்டியில் 70 சதவீதம் வரை பொருளீட்டு கடன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.