கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2025-01-13 15:44 GMT
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்தில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தங்கியிருந்துள்ளார். பின்னர், மதுபோதையில் இருந்த சதீஷ்குமார் இரவு நேரத்தில் நோயாளிகள் வார்டுக்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த 50 வயது பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் இளைஞர் சதீஷ்குமாரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இதே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மருத்துவ மாணவிக்கு புத்தாண்டு தினத்தில் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், மாநிலத்தின் தலைநகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பிரதான அரசு மருத்துவமனை வளாகத்துக்குள்ளாகவே பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் நடைபெற்றிருக்கும் இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என பெயரளவில் சொல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News