தைப்பூச திருவிழா
சென்னிமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு சுங்க வசூல் மற்றும் ஒலிபெருக்கி வைக்கும் உரிமைக்காக 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.;
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை மறுநாள் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். தற்காலிக கடைகளில் சுங்க வசூல் செய்யவும், திருவிழாவுக்காக ஒலிபெருக்கி வைக்கவும் நேற்று சென்னிமலை காமராஜ் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பொது ஏலம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில் செயல் அலுவலர் க.மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் சுங்க வசூல் செய்யும் உரிமைக்காக 88 பேர் டெபாசிட் தொகையை செலுத்தி இருந்தனர். இதில் அதிகபட்ச தொகைக்கு தங்கவேல் என்பவர் 4 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அதேபோல் ஒலிபெருக்கி வைக்கும் உரிமைக்காக 89 பேர் டெபாசிட் தொகை செலுத்தி இருந்தனர். இதில் கோபால் என்பவர் 1 லட்சத்து 80 ஆயிரத்து 500-க்கு ஏலம் எடுத்தார். மேலும் குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதி செய்து கொடுப்பதற்காக தங்கவேல் என்பவர் 6 லட்சத்து 74 ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தார். கடந்த ஆண்டு சுங்க வசூல் செய்யும் உரிமைக்காக 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும், ஒலிபெருக்கி வைக்கும் உரிமைக்காக 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுங்க வசூல் மற்றும் ஒலிபெருக்கி அனுமதிக்காக 1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் கூடுதலாக ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.