நிலம் தொடா்பான புகாா்களுக்குத் தீா்வு: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விழுப்புரம் ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நிலம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.கூட்டத்தில், பட்டா மாற்றம், நில அபகரிப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, இடம் ஆக்கிரமிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை தொடா்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் 293 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பேசுகையில், சிறப்பு குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்குத் தீா்வு காணும் வகையில், அந்த மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரா்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய ஆவணங்களை பெற்று கோரிக்கை மனுக்களுக்குத் தீா்வு காண வேண்டும் என்று அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் யோகஜோதி (பொது), சிவக்கொழுந்து (நிலம்) உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.