போலீசாரை தாக்கிய தந்தை மற்றும் மகன்கள் உட்பட மூன்று பேர் கைது
பூந்தமல்லி அருகே போலீசாரை தாக்கிய தந்தை மற்றும் மகன்கள் உட்பட மூன்று பேர் கைது;
பூந்தமல்லி அருகே போலீசாரை தாக்கிய தந்தை மற்றும் மகன்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கும், அந்த வழியாக ஆட்டோவில் வந்த மூன்று பேருக்கும் வழி விடுவது குறித்து தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோவில் வந்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்த பாபு (55), அவரது மகன்கள் கருணாகரன் (30) மற்றும் நந்தகுமார் (26) ஆகியோர் முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரை தாக்கிய தந்தை, மகன்கள் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணைக்காக நசரத்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது தங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டார்கள் என ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து அங்கிருந்த போலீஸ்காரர்களை தரக்குறைவாக பேசி திடீரென தாக்க முற்பட்டனர். இதில் இரண்டு போலீஸ்காரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மூன்று பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.