கொந்தகை கண்மாயில் படகு சவாரி - சுற்றுலா துறை அமைச்சர் தகவல்
சிவகங்கை மாவட்டம், கொந்தகை கண்மாயில் படகு சவாரி, கலாச்சார மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.;
சிவகங்கை மாவட்டம் கீழடி, பிரான்மலை, கானாடுகாத்தான் பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப் பன், சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுற்றுலாக் கொள்கையால் நாட்டின் முன்னோடி சுற்றுலா தலமாக தமிழகம் மாறியுள்ளது. சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 10 சுற்றுலா தலங்களை தேர்வு செய்து வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். மத்திய சுற்றுலாத் துறையால் கீழடி, 2024-க்கான சிறந்த பாரம்பரிய சுற்றுலா கிராமமாக தேர்வாகியுள்ளது. இங்கு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.34.97 லட்சத்தில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கொந்தகை கண்மாயில் படகு சவாரி, கலாச்சார மையம் ஏற்படுத்த சுற்றுலா வல்லுநர் குழு ஆய்வு செய்துள்ளது. பிரான்மலையை மேம்படுத்த ரூ.58.61 லட்சத்தில் 4 பணிகள் நடைபெற உள்ளன. பிரான் மலையில் வேளர்குளம் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட உள்ளது. கானாடுகாத்தானில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.7.98 கோடியில் 12 பணிகள் நடைபெற உள்ளன என்று சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கூறினார். மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பேரூராட்சித் தலைவர்கள் சேங்கைமாறன் (திருப்புவனம்), ராதிகா (கானாடுகாத்தான்), ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வானதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், உதவி முதன்மை மேலாளர் டேவிட் பிரபாகரன், தொல்லியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், சுற்றுலா அலுவலர் திருவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.