பக்தி விழாவைபோல் புத்தக திருவிழாவையும் கொண்டாடுங்கள் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா கருத்து
சிவகங்கை: பக்தி விழாக்களைபோல் புத்தகத் திருவிழாவும் கொண்டாடப்பட வேண்டும் என பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தெரிவித்தார்.;
சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், பபாசி சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு ‘வாழ்க்கையில் உயர்வுபெற பெரிதும் உதவுவது கல்வியே? செல்வமே?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக பங்கேற்ற பேராசிரியர் பேசுகையில், பக்தி திருவிழாக்களை போல் புத்தகத் திருவிழாவையும் கொண்டாட வேண்டும். படிக்க இடம் தரக்கூடிய அறிவுத் திருக்கோயில்தான் புத்தகத் திருவிழா. வாழ்க்கையில் உயர்வு பெற புத்தகங்கள்தான் உதவுகின்றன. இதை இளைஞர்கள், மாணவர்கள் புரிந்து கொண்டால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும் என்று பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்தார். முன்னதாக பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்களுக்கு ஆட்சியர் ஆஷா அஜித் நினைவுப் பரிசு வழங்கினார். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சத்தியமூர்த்தி வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா நன்றி கூறினார்.