குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மல்லியம் கடைவீதியில் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியல் போராட்டம்:-;

Update: 2025-02-26 13:59 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா ஆணை மேலகரம் ஊராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு மஞ்சள் வாய்க்காலில் போர்வெல் மூலம் குடிதண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படாத நிலையில் போர்வெல் பழுது காரணமாக 1 மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் மல்லியம் கடைவீதியில் மயிலாடுதுறை கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போர்வெல்லை சரி செய்ய இப்போது நிதி இல்லை என்று ஊராட்சி நிர்வாகம் தெரிவிப்பதை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் முக்கால்மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News