பாதாள சாக்கடை திட்டத்துக்கு எதிர்ப்பு:
மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா;
சேலம் கொண்டலாம்பட்டி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் பாதாள சாக்கடை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பொதுமக்கள் கூறும் போது, ‘எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான் எங்கள் பகுதியில் சாலை போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்காக அந்த சாலையை தோண்டப்பட்டால் லேசான மழை பெய்தாலேயே மழைநீர் வீட்டுக்குள் புகுந்து விடும். எனவே எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் வேண்டாம்’ என்றனர். இதுதொடர்பாக மனுவாக எழுதி கொடுங்கள் என்று அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மனுவாக எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.