புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா;
தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில், திருமருகல், திருப்புகலூர், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, 15 தங்கம் பதக்கம், 13 வெள்ளி பதக்கம், 4 வெண்கல பதக்கங்களை வென்றனர். போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில், திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சாமிகள், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ஆசைமணி ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் பாண்டியன் ஆகியோரை சால்வை அணிவித்து பாராட்டினர். விழாவில், திட்டச்சேரி வர்த்தக சங்க முன்னாள் தலைவர் மோகன், சித்த மருத்துவர் அஜ்மல்கான் மற்றும் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.