பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும்
பாகுபாடின்றி உரிய நிவாரணத் தொகையை வழங்க கோரிக்கை;
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெ.கமல்ராம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது பெஞ்சல் புயல், அதீத பருவமழை மற்றும் பருவம் தவறிய மழை ஆகியவற்றால், நாகை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி கடும் பேரழிவை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பாதிப்புகளை பல முறை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தனர். கடந்த 2 மாதமாக பாதிப்பிற்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கும் படி, விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நாகை மாவட்டத்தில், பெஞ்சல் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 3340 ஹெக்டருக்கு மட்டும் நிவாரண தொகை அறிவிக்கபட்டிருப்பது, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர் பாதிப்பினால் விவசாயிகள் கடும் மகசூல் இழப்பை சந்தித்த நிலையில், அரசின் நிவாரணத் தொகையை எதிர்பார்த்து, பெற்ற வேளாண் கடன்களை திரும்ப செலுத்தி விடலாம் என காத்திருந்த விவசாயிகள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் கடும் பேரழிவை எதிர்கொள்ளும் திருக்குவளை, கீழ்வேளூர், தலைஞாயிறு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே, பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரண தொகையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.