ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில்

பாரம்பரிய -நீடித்த வாழ்விற்கான அறிவியல் கண்காட்சி;

Update: 2025-03-04 12:05 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில், பாரம்பரிய மற்றும் நீடித்த வாழ்விற்கான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், ஒன்றாம் வகுப்பு மாணவி அனன்யா கண்காட்சியை திறந்து வைத்தார். நமது முன்னோர் பயன்படுத்தி, காலப்போக்கில் நாம் மறந்து போன உணவு மற்றும் பயன்படுத்தும் பொருட்களை மீட்டெடுத்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் கண்காட்சி நடைபெற்றது. உணவு மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பலவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். கேழ்வரகு, கொழுக்கட்டை, கஞ்சி, அடை, சுண்டல், பயற் கஞ்சி, தோசை, முளைகட்டிய பயிறு, சிறுதானிய கஞ்சி, சுண்டல் போன்றவற்றை மாணவர்கள் வீடுகளில் செய்து வந்து காட்சி படுத்தி, மற்ற மாணவர்களுக்குஉண்பதற்கு வழங்கினர். பாரம்பரிய நெல் வகைகள் 38 நெல் மாதிரிகளை பல்வேறு விவசாயிகளிடமிருந்து சேகரித்து மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. சம்பா வகைகளில், சம்பா மோசனம், மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மணி சம்பா, ரங்கூன் சம்பா, கருடன் சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருப்பு கவுனி, சிவன் சம்பா, குளிஅடிச்சான், தூய மல்லி மிளகு சம்பா, காட்டு சம்பா, கருங்குருவை, சேலம் சன்னா, மைசூர் மல்லி கிரண் சின்னார், பால் குடவாழை, இலுப்பை பூ சம்பா, சொர்ண மசூரி, தங்க சம்பா உள்ளிட்ட அரிய வகை நெல் வகைகளைப் பார்த்து மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். தென்னை மர மற்றும் பனை மர குச்சிகளால் செய்யப்பட்ட கைவினை பொம்மைகள், வாழ்க்கைக்கு பயன்படும் அறிவியல் தத்துவங்கள் உள்ளிட்ட காட்சி பொருள்கள் இடம் பெற்றன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் பட்டதாரி ஆசிரியை நித்யா செய்திருந்தார். சிறப்பான காட்சி பொருட்களை கண்காட்சியில் வைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Similar News